Skip to content

மகத்துவம் பொருந்திய மன்னிப்பிற்கான நாள்: அரஃபா நாள்

F.N.Natha Nihar
F.N.Natha Nihar
Faculty of Indigenous Medicine
PUBLISHED
November 9, 2026
Day of Arafah

​"அல்லாஹ் தன் அடியார்களுக்கு நரகிலிருந்து விடுதலை அளிக்கும் நாட்களில், அரஃபா நாளை விட அதிகமான நாள் வேறெதுவும் இல்லை." (ஆதாரம்: முஸ்லிம்)

​புனிதமான துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிகரமாக விளங்குவதுதான் இந்த 'அரஃபா தினம்'. ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்தைய தினமான அன்று, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்களின் ஆன்மீகப் பயணத்தின் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.

"​ஹஜ் என்பதே அரஃபாதான்" ​நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஹஜ் என்பதே அரஃபா தான்." புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் அரஃபா மைதானத்தில் தங்குவது மிக முக்கியமான கடமையாகும். அந்த மைதானத்தில் கோடிக்கணக்கான மக்கள் மொழி, இனம், நிறம் கடந்து ஒரே ஆடையணிந்து இறைவனிடம் கையேந்தி நிற்பது, மறுமையின் விசாரணைக் களத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

​ஏன் இந்த நாள் இவ்வளவு மகத்துவமானது?

​மார்க்கம் முழுமையடைந்த நாள்: "இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்..." (அல்குர்ஆன் 5:3) என்ற வசனம் அரஃபா நாளில்தான் அருளப்பட்டது.

​பாவமன்னிப்பின் சங்கமம்: வானுலக மலக்குகளிடம் அல்லாஹ், அரஃபா மைதானத்தில் திரண்டிருக்கும் தன் அடியார்களைப் பற்றி பெருமை பாராட்டுகிறான். அவர்களின் பாவங்களை மன்னித்து நரகிலிருந்து விடுதலை அளிக்கிறான்.

​ஷைத்தான் சிறுமையடையும் நாள்: அல்லாஹ்வின் எல்லையற்ற மன்னிப்பைக் கண்டு ஷைத்தான் மிகவும் கோபமடைந்தும், சிறுமையடைந்தும் காணப்படும் நாள் இதுவேயாகும்.

ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

​ஹஜ்ஜுக்குச் செல்லாத நாம் இந்த அருளைப் பெற இஸ்லாம் அழகிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது: ​அரஃபா தின நோன்பு: அரஃபா நாளில் நோன்பு நோற்பது, கடந்து சென்ற ஒரு வருடத்தின் பாவங்களையும், வரக்கூடிய ஒரு வருடத்தின் பாவங்களையும் அழித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள்.

​சிறந்த துஆ: "துஆக்களில் மிகச் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே அன்று அதிகமாக இறைவனிடம் முறையிட்டு நமது தேவைகளைக் கேட்போம்.

​திக்ருகள் செய்தல்: சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் மற்றும் 'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் தவ்ஹீத் கலிமாவை அன்று முழுவதும் ஓதுவது மிகவும் சிறப்பானது.

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ​"லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்." பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. புகழனைத்தும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உள்ளவன்.

பாவமன்னிப்பு தேடுதல் (இஸ்திஃபார்): ​இது "பாவமன்னிப்பின் நாள்" என்பதால், தெரிந்தே செய்த மற்றும் தெரியாமல் செய்த அனைத்துப் பாவங்களுக்காகவும் மிக உருக்கமாக இறைவனிடம் 'தவ்பா' செய்ய வேண்டும். ​அஸ்தஃபிருல்லாஹ் (அல்லாஹ்விடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்) என்று நாவால் மொழிவதுடன், உள்ளத்தாலும் வருந்தி இனி அந்தப் பாவங்களைச் செய்யமாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும்.

​ஸதகா செய்தல்: ​சிறந்த நாட்களில் செய்யப்படும் நற்செயல்களுக்கு பன்மடங்கு கூலி உண்டு. அரஃபா நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது அல்லது நிதி உதவி செய்வது அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும், அவனது கோபத்தைத் தணிக்கும் மற்றும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

​நிறைவாக... இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிச் செய்யும் ஒவ்வொரு சிறிய நற்செயலும் அரஃபா நாளில் மலையளவு நன்மையைத் தரும். எனவே ​வாழ்க்கையில் நாம் செய்த பாவக்கறைகளை 'ஈமான்' எனும் ஒளியால் கழுவி, இறைவனுக்கு விருப்பமான அடியார்களாக மாறக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்துவோம். இந்த புனித நாளில் நோன்பு நோற்று, நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பும், சுவனம் செல்லும் பாக்கியத்தையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கட்டும். ஆமீன்.

  • #Arafah