ஈமானிய வீரமும் இறைவனின் அருளும்

இஸ்லாமிய வரலாற்றை மாற்றியமைத்த பத்ருப் போர் என்பது வெறும் இரு வேறு துருவங்களுக்கு இடையிலான ஆயுத மோதல் மட்டுமல்ல; அது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடந்த முதல் போராகும். மக்காவில் 13 ஆண்டுகாலம் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காகச் துயரங்களை அனுபவித்து, இறுதியில் தங்களின் சொந்த மண்ணை விட்டு மதீனாவிற்குப் புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் நியாயமான எழுச்சியே இந்தப் போராகும். ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமலான் 17-இல், பத்ருப் பள்ளத்தாக்கில், நோன்பு நோற்ற நிலையில் வெறும் 313 வீரர்களுடன் புறப்பட்ட முஸ்லிம்கள், தங்களை விட அதிக பலமும் ஆயுதங்களும் கொண்ட 1000 குறைஷிக் காபிர்களை எதிர்கொண்டனர். அபூ ஸுப்யான் தலைமையிலான வியாபாரக் கூட்டத்தை வழிமறிக்கும் நோக்கில் ஆரம்பமான இந்த நகர்வு, போர்க்களமாக மாறியபோது, நபி (ஸல்) அவர்கள் காட்டிய தலைமைத்துவமும், ஸஹாபாக்களின் “நீங்கள் எங்களைக் கடலில் குதிக்கச் சொன்னாலும் நாங்கள் தயார்” என்று முழங்கிய அந்தத் தியாக வேட்கையும் போரின் மையமாக அமைந்தது. வெற்றி என்பது வெறும் வாள்களின் கூர்மையிலோ அல்லது குதிரைகளின் வேகத்திலோ தங்கியிருக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அந்தப் போருக்கு முந்தைய இரவு நபி (ஸல்) அவர்கள் கண்ணீர் மல்கச் செய்த பிரார்த்தனை , முஸ்லீம்களுக்கு துணையாக ஆயிரம் மலக்குகளை இறக்கி வைத்தது. முஸ்லிம்களின் களைப்பைப் போக்க அல்லாஹ் வழங்கிய நிம்மதியான உறக்கமும், போர்க்களத்தின் மணலை உறுதிப்படுத்தப் பெய்த மழையும், எதிரிகளின் கண்களை மறைத்த இறைவனின் அற்புதங்களும் தவக்குலுக்கு சான்றாக அமைகின்றன.
“அவர்களை நீங்கள் கொல்லவில்லை, அல்லாஹ்வே கொன்றான்” (08:17) என்ற குர்ஆன் வசனம், இவ்வுலகின் வெற்றிகள் அனைத்தும் இறைவனின் பேராற்றலால் விளைபவை என்பதை உறுதிப்படுத்தியது. போரின் முடிவில் கைதிகளைக் கண்ணியமாக நடத்தியதும், கல்வியறிவுள்ள கைதிகள் முஸ்லிம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதையே விடுதலையாக அறிவித்ததும் இஸ்லாம் அறிவிற்கும் அறத்திற்கும் கொடுத்த உயரிய மதிப்பை விளக்குகிறது. நபியின் தலைமைத்துவம், ஈமானிய பலம், முறையான திட்டமிடல், தலைமைக்குக் கீழ்ப்படிதல் மற்றும் எத்தகைய இக்கட்டான சூழலிலும் இறைவனை மட்டுமே சார்ந்திருத்தல் ஆகிய உயரிய பண்புகள் பத்ர் நமக்குத் தரும் பாடங்களாகும். ஸஹாபாக்களின் வீரமும் ஈமானும், வரலாற்றின் பக்கங்களில் அழியாத ஒளியாக நின்று, அநீதிக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும் முஸ்லிம்களுக்கு வீரத்தையும் நம்பிக்கையையும் தந்து கொண்டே இருக்கும்.
- #Islam