Skip to content

மகிமை பொருந்திய மாற்றத்திற்கான இரவு: லைலதுல் கத்ர்

Ajeeth Asma
Ajeeth Asma
Faculty of Law
PUBLISHED
November 9, 2026
Laylat Al Qadr

​"நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்..." (அல்குர்ஆன் 97:1-5)

​புனித ரமழானின் இறுதிப் பத்து நாட்களை நாம் எட்டிவிட்டோம். இந்த நாட்களில் நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு இரவு தான் 'லைலதுல் கத்ர்'. ​ ​லைலதுல் கத்ர் என்ற உடனே நம்மில் பலரது நினைவுக்கு வருவது ரமழான் 27 ஆம் இரவு மட்டுமே. ஆனால் உண்மையான ஈமானியத் தேடல் என்பது ரமழானின் இறுதிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகிய அனைத்திலும் இருக்க வேண்டும் என மார்க்கம் வழிகாட்டுகிறது.

​"ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடிக்கொள்ளுங்கள்." (புகாரி, முஸ்லிம்)

​அல்லாஹ் இந்த இரவை மறைத்து வைத்திருப்பதன் நோக்கம் தனது அடியார்கள் அந்தப் பத்து நாட்களும் அதிகப்படியான இபாதத்களில் ஈடுபட்டு தன்னோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். ​ ​இந்த இரவு இவ்வளவு மகத்துவம் பெறக் காரணம் அகிலத்தின் வழிகாட்டியாம் அல்குர்ஆன் இந்த இரவில் தான் இறக்கப்பட்டது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுமார் 83 வருடங்கள் (ஆயிரம் மாதங்கள்) இடைவிடாது வணங்கினால் என்ன நன்மை கிடைக்குமோ அதை விட மேலான நன்மையை இந்த ஒரு இரவில் அல்லாஹ் வழங்குகிறான். வானவர்களும், ஜிப்ரீல் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையைச் சுமந்து பூமிக்கு இறங்கும் அமைதி மிக்க இரவு இது. ​ ​நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இறுதிப் பத்து நாட்களில் இரவு முழுவதும் விழித்திருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். நாமும் அவர்களின் உம்மத்தாக இரவில் நீண்ட நேரம் நின்று தொழுதல்,குர்ஆன் அருளப்பட்ட இரவில் அதன் வசனங்களோடு உரையாடுதல், "யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன், மன்னிப்பையே விரும்புபவன், எனவே என்னை மன்னிப்பாயாக!" என்ற துஆவை அதிகம் ஓதுதல் போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் பாவங்களினால் கறைபடிந்த எமது இதயங்களை ஈமான் எனும் ஒளியால் கழுவி இறைவனுக்கு விருப்பமுள்ள அடியானாக மாற கிடைத்த அரிய வாய்ப்பினை பயன்படுத்துவோம்.

இந்த மகத்துவமிக்க இரவை அடைந்து நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பும் ரய்யான் வாயில் வழியாக சுவன நுழையும் பாக்கியத்தையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கட்டும்.

  • #Ramazan